அதிகம் விபத்து நடக்கும் 50 இடங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
அதிகம் விபத்து நடக்கும் 50 இடங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
ADDED : செப் 05, 2025 07:28 AM

தமிழகத்தில் அதிக விபத்துகள் நடக்கும், 50 இடங்களில் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி அளித்து, தன்னார்வலர்களாக அறிவிக்கப்பட இருப்பதால், விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடி உயிர் காக்கும் சிகிச்சை கிடைக்க உள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 70,000 விபத்துகளும், 17,000 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தாண்டில் ஜூன் மாதம் வரை, 34,611 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் சிக்கிய, 8,652 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினமும் 11; கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் தினசரி, 10 விபத்துகள் நடக்கின்றன.
சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், விபத்துகளில் சிக்குபவர்களை, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக மீட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து, 48 மணி நேரத்திற்கு, 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவை அரசு ஏற்கிறது.
இதனால், உயிரிழப்புகள் குறைந்தாலும், உடனடியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாததாலும், முறையான முதலுதவி உடனடியாக கிடைக்காததாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் விதமாக, தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும் இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரே பகுதியில் ஆண்டுக்கு, 100க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ள, 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு, வியாபாரிகள், காவலாளிகள், போலீசார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், 50 பேருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக, மதுரை, திருச்சி, வேலுாரில் இப்பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முடித்தவர்களுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் பயிற்சிக்கான கையேடு வழங்கப்படும். அப்பகுதியில் விபத்துகள், பாம்புக்கடி போன்ற சம்பவங்களுக்கு யாரேனும், 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளும்பட்சத்தில், உடனடியாக அப்பகுதி தன்னார்வலர்கள், 50 பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அருகாமையில் இருக்கும் தன்னார்வலர்கள் சென்று, முதலுதவி சிகிச்சை அளிப்பர். அதனால், விபத்துகளில் சிக்குபவர்களின் உயிரிழப்பை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -