முதல் சி.என்.ஜி., காஸ் பஸ் சென்னை - திருச்சிக்கு இயக்கம்
முதல் சி.என்.ஜி., காஸ் பஸ் சென்னை - திருச்சிக்கு இயக்கம்
ADDED : நவ 15, 2024 11:59 PM
சென்னை:சி.என்.ஜி., தொழில்நுட்பத்தில் தயாரான முதல் பஸ், சென்னை - திருச்சி இடையே நேற்று இயக்கப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனப்படும் திரவ இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஏழு போக்குவரத்துக் கழகங்களில், சி.என்.ஜி., வாயிலாக இயங்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மாற்றப்பட்டன. அதில் முதல் பஸ், நேற்று சென்னை - திருச்சி இடையே இயக்கப்பட்டது.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை -- திருச்சி வழித்தடத்தில், சி.என்.ஜி., ஆக மாற்றப்பட்ட பஸ். கடந்த 12ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. அவற்றில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றதும், நேற்று முதல் பயணியர் சேவையை துவங்கியது.
அடுத்த வாரத்தில், மற்றொரு பஸ்சையும் இயக்க உள்ளோம். பி.எஸ்., 4 வகை டீசல் பஸ்களை, சி.என்.ஜி., பஸ்களாக மாற்றுவதன் வாயிலாக, எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி, பராமரிப்பு செலவு, இயக்கச் செலவு வெகுவாக குறையும். டீசல் பஸ்களை ஒப்பிடுகையில், சி.என்.ஜி., பஸ்சில், ஒரு கி.மீ., 4.50 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

