ADDED : மார் 17, 2026 02:08 AM
புதுச்சேரியில் ஏப்., 9ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளுக்கு 12 அலுவலகங்கள், காரைக்கால் பிராந்தியத்தில் ஐந்து தொகுதிகளுக்கு மூன்று அலுவலகங்கள், மாகி மற்றும் ஏனாமில் தலா ஒரு அலுவலகம் என, 17 அலுவலகங்களில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிகளிடையே இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாத நிலையில், முதல் நாளான நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்ய ஆளின்றி, தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம், நேற்று முகூர்த்த தினம் மற்றும் பிரதோஷம் என்பதால், தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள அரசியல் கட்சியினர், மனுக்கள் வாங்கி சென்றனர்.
நாளை அமாவாசை என்பதால், அதன் பிறகே மனு தாக்கல் சூடுபிடிக்கும். இறுதி நாளான 23ம் தேதி, கிருத்திகை என்பதால், அன்றைய தினம், ஆளும் என்.ஆர்.காங்., வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்வர் என தெரிகிறது.
