நாட்டிலேயே முதல் முறையாக 'புலிவண்டுகள்' தேடல் நிகழ்வு
நாட்டிலேயே முதல் முறையாக 'புலிவண்டுகள்' தேடல் நிகழ்வு
ADDED : ஜூலை 31, 2025 01:07 AM

விருதுநகர்:நாட்டிலேயே முதல் முறையாக 'புலிவண்டுகள்' தேடல் நிகழ்வு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது. இதில், 35 புலிவண்டுகள் ஆவணப்படுத்தப்பட்டன.
புலி வண்டுகள் வேகமாக ஓடும், வேட்டையாடும் பூச்சிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை. புலி போன்று பதுங்கி நின்று வேட்டையாடுவதால் புலி வண்டுகள் என பெயர் பெற்றுள்ளன. நீண்ட கால்கள், பெரிய கண்கள், சக்திவாய்ந்த கீழ்த்தாடைகளைக் கொண்டுள்ளன.
இவை ஒரு பகுதியில் இருந்தால், அது வளமான பகுதி என அர்த்தம். மக்கள் தொகை வீழ்ச்சி, வாழ்விட மாற்றங்கள், சுற்றுச்சூழல் ஆபத்துகளின் நம்பகமான உயிரியல் குறிகாட்டியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில், 245 ஆவணப்படுத்தப்பட்ட புலி வண்டு இனங்கள் உள்ளன. 120க்கும் மேற்பட்ட இனங்களை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
இதில் பாதிக்கும் மேல், தொழில்முறை விஞ்ஞானிகளே கண்டுள்ளனர். இதில், மக்களையும் ஈடுபடுத்த, 'டைகர் பீட்டில் குவெஸ்ட் இந்தியா 2025' என்ற புலிவண்டுகள் தேடல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
புலி வண்டு இனங்களை கண்டறிய நாடு முழுதும், 12 மாநிலங்களில் இருந்து, 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உத்தர பிரதேசம், ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தன்னார்வ அமைப்புகள் நடத்திய இந்நிகழ்வு, ஜூன், 28 முதல் ஜூலை, 6 வரை நடந்தது. தமிழகத்தில் ராஜபாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இந்த தேடல் நிகழ்வு நடந்தது.
இந்த ஒன்பது நாட்களில், 'ஐநேச்சுரலிஸ்ட்' வலைதளத்தில் பங்கேற்பாளர்கள், 973 தகவல்களை பதிவேற்றினர். இந்த தேடல் நிகழ்வில், 35 புலி வண்டுகள் ஆவணப்படுத்தப்பட்டன. இது ஜி.பி.ஐ.எப்., எனும் உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதி என்ற தரவுத்தளத்திலும் உறுதி செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த உயிரியலாளர் விபின் துத்வா, அங்குள்ள தேசிய பூங்காவில் மிகவும் அரிதான புலிவண்டை கண்டறிந்தார்.
இந்த தேடல் நிகழ்வின் அமைப்பாளர்களில் ஒருவரான வெ.ஷரண் கூறுகையில், ''புலி வண்டு இனங்களின் பரவலை வரைபடமாக்குவதும், அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்த மக்கள் விழிப்புணர்வை வளர்ப்பதும் எங்கள் நோக்கம். புலிவண்டு குறித்து ஆராய விரும்புவோர், tigerbeetlewatch இன்ஸ்டாகிராம் தளத்தில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.