உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் முதல் கால யாகசாலை பூஜை துவக்கம்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் முதல் கால யாகசாலை பூஜை துவக்கம்
ADDED : ஏப் 01, 2025 06:51 AM

உத்தரகோசமங்கை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்., 4ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நேற்று காலை 9:20 மணி முதல் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மங்களநாதர் சுவாமி வலது சன்னதி பிரகாரத்தில் அனுக்ஞை பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் துவங்கியது.
உற்ஸவ மூர்த்திகளாக விநாயகர், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் வடிவமைக்கப்பட்டிருந்தனர். 200க்கும் மேற்பட்ட குருக்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்டனர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வேதாகம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள், துாத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவகாமி வித்யாலய முதல்வர் கல்யாணசுந்தர சிவாச்சாரியார், கோவை அரண் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், பொறுப்பாளர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று சாந்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம் உள்ளிட்டவைகளும் பரிவார மூர்த்திகளின் கலசம் பிரதிஷ்டையும் நடக்கிறது. சிறப்பு தீபாராதனை, பூர்ணாஹூதி உள்ளிட்டவைகளுக்கு பிறகு பிரசாதம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் உத்தரகோசமங்கைக்கு வரத்துவங்கியுள்ளனர். உத்தரகோசமங்கை மின் அலங்கார விளக்குகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

