வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு
வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு: மீனவர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 15, 2025 09:33 PM
சென்னை:கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் ஆகியவற்றின்போது, 'மீனவர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகளாகியும், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, தென்னிந்திய மீனவர்கள் சங்கத் தலைவர் கு.பாரதி கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில், 114வது வாக்குறுதியாக, 'மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, பழங்குடியினருக்கான சலுகைகளை அவர்கள் பெற, தி.மு.க., முயற்சி செய்யும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், லோக்சபா தேர்தலிலும் வாக்குறுதி அளித்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, சட்டசபையில், ஒரு தீர்மானம் கூட போடவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, இந்த ஆண்டிலேயே வாக்குறுதியை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

