இந்திய மீனவர்கள் குறித்து ஆவணப்படத்துடன் இலங்கையில் அமைச்சரிடம் மீனவர்கள் புகார்
இந்திய மீனவர்கள் குறித்து ஆவணப்படத்துடன் இலங்கையில் அமைச்சரிடம் மீனவர்கள் புகார்
ADDED : மார் 19, 2025 02:54 AM
ராமநாதபுரம்:இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆவணப்படத்துடன் இலங்கையில் கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகரிடம் அந்நாட்டு மீனவர்கள் புகார் அளித்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்கின்றனர். தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் தண்டனையும், அபராதம் விதிக்கப்படுகிறது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகரிடம் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சமாஜ செயலாளர் முகமது ஆலம், வடக்கு மாகாண மீனவர் சம்மேளன நிர்வாகி அன்னராஜா ஆகியோர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆவணப்படமாக தயாரித்து புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து முகமது ஆலம் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதால் கடல் வளம் அழிவதையும், இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதையும் ஆவணப்படமாக தயாரித்து அமைச்சர் மூலம் அதிபரிடம் வழங்க உள்ளோம். அமைச்சர் ஆவணப்படத்தை முழுமையாக பார்வையிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியிருக்கிறார்.
அன்னராஜா கூறியதாவது: வடக்கு மாகாண மீனவர்கள் தயாரித்துள்ள ஆவணப்படத்தை கடல் தொழில் அமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாணத்தில் உள்ள சில அதிகாரிகள் அரசாங்கத்திற்கு ஒன்றையும், மீனவர்களிடம் ஒன்றையும் சொல்லி வருகின்றனர். எங்கள் கடலில் நாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.