சுறா மீன்கள் இறப்பு குறித்து ஆய்வு மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
சுறா மீன்கள் இறப்பு குறித்து ஆய்வு மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
ADDED : டிச 25, 2025 06:02 AM

சென்னை: 'அரிய வகை சுறா மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது குறித்து, ஆய்வு நடத்த வேண்டும்' என, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதிகளில், குறிப்பாக அரபிக் கடல் பகுதியில் வாழும் அரிய வகை பெரிய சுறா மீன்கள், தொடர்ச்சியாக உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.
கடலில் வீசப்படும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை, சுறாக்கள் உணவாக உட்கொள்வதால், அவற்றின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக, முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த சுறாக்களின் உடல்களை முறையான உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி, இறப்பிற்கான உண்மையான காரணம் பிளாஸ்டிக் மாசுபாடா அல்லது வேறு ஏதேனும் நச்சுத்தன்மையா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

