ADDED : ஜன 11, 2024 12:38 AM

காரைக்கால்:இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர்.
வங்கக் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த டிச.9ம் தேதி காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரையும், கடந்த 16ம் தேதி 14 பேரையும், இலங்கை கடற்படை கைது செய்து, பருத்திதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 27 பேரையும் விடுதலை செய்து கடந்த 28ம் தேதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த டிச.9ம் தேதி கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 8 பேர், தமிழக மீனவர்கள் 5 பேர் என மொத்தம் 13 பேர் இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தடைந்தனர்.
அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அழைத்து வந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள 14 மீனவர்கள் விரைவில் காரைக்காலுக்கு அழைத்து வரப்படுவர் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.