அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் அமைச்சரை அவமதித்த மீனவர்கள்: கைகலப்பில் ஒருவர் காயம்
அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் அமைச்சரை அவமதித்த மீனவர்கள்: கைகலப்பில் ஒருவர் காயம்
ADDED : ஏப் 12, 2024 09:53 PM

மயிலாடுதுறை:அதிமுகவின் மிகப்பெரும் பலமாக மீனவர் வாக்கு வங்கி அமைந்திருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீனவர் வாக்கு வங்கி அதிமுக, திமுக, நாதக, பாஜக என நான்காக உடைந்துள்ளது. லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 28 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றிட அதிமுக வேட்பாளர் பாபுவுக்கு ஆதரவாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலும், தற்போதைய அமைச்சர் மெய்ய நாதனும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை ஜெயபால் சின்னூர் பேட்டை தொடங்கி மீனவ கிராம நிர்வாகிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் பாபுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் அவரை தொடர்ந்து காங். கட்சி வேட்பாளர் சுதாவிற்கு ஆதரவாக திமுக அமைச்சர் மெய்ய நாதன் பூம்புகார் எம்எல்ஏ. நிவேத எம் முருகன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் சென்று மீனவ கிராம நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கீழமூவக்கரை கிராமத்திற்குச் சென்றார். ஏற்கனவே அக்கிராம மக்கள் தூண்டில் வளைவு, நவீன மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு முடிவுடன் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும், சமாதானம் செய்து வைக்க வந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகளை திருப்பி அனுப்பியதையும் அறியாத முன்னாள் அமைச்சர் ஜெயபால் கோவிலில் கூடியிருந்த கிராம நிர்வாகிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் பாபுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மீனவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயபாலை யாருன்னே தெரியாது, இவர் இந்த ஊருக்கு என்ன செய்துள்ளார் என்று கேள்வி கேட்டு தொடர்ந்து கூட்டத்தை நடத்த விடாதபடி கூச்சல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயபால் எழுந்து போராட்டம் குறித்தும், தங்களது கோரிக்கை குறித்தும் எனக்கு முழுமையாக தெரியவில்லை. என்னிடம் சொன்னால் தான் தெரியும். மீனவர் கிராம கூட்டங்கள் குறித்து நன்றாக அறிந்தவன். நான் வந்த நிலையில் இது போன்று பேசக்கூடாது என்றார்.
தொடர்ந்து கீழமூவர்கரை கிராம தலைவர் வெங்கடேஷ் மீனவர்கள் அமைதி காக்க வேண்டியும் பலன் இல்லை. இதனை அடுத்து வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயபால் கூட்டத்திலிருந்து வெளியேறினார். மீனவர்கள் முன்னாள் அமைச்சரை அவமதித்ததால் ஆத்திரமடைந்த உள்ளூர் அதிமுகவினர் கிராம நிர்வாகிகளிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து அங்கு இருந்து புறப்பட்டனர். அப்போது கோவிலுக்கு வெளியே கூட்டத்தில் பேசிய மீனவர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

