'கப்பா பைகஸ்' கடற்பாசி வளர்ப்பில் மீனவர்கள் ஆர்வம்: ரூ.2.5 லட்சம் லாபம்
'கப்பா பைகஸ்' கடற்பாசி வளர்ப்பில் மீனவர்கள் ஆர்வம்: ரூ.2.5 லட்சம் லாபம்
ADDED : ஜூலை 17, 2025 12:35 AM

சென்னை:இந்தோனேஷியா வகையைச் சேர்ந்த, 'கப்பா பைகஸ்' பாசி வளர்ப்பில், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுவதாக, துாத்துக்குடி மீனவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடியைச் சேர்ந்தவர் எம்.முருகன், 53. மீனவரான இவர், 18 ஆண்டுகளாக பாசி வளர்த்து, அதன் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக, 'நபார்டு' வங்கி உதவியுடன், 'கப்பா பைகஸ்' வகையைச் சேர்ந்த பாசி வளர்த்து, லாபம் பெறுகிறார்.
அவர் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக நபார்டு வங்கி வாயிலாக, இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'கப்பா பைகஸ்' பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். மற்ற வகை பாசிகளை விட, இதில் நல்ல மகசூல் பெறலாம். மற்ற வகை பாசிகள், 45 நாட்கள் வளர்க்க வேண்டும்.
கப்பா பைகஸ் பாசி, 30 நாட்களில் வளரக்கூடியது. மேலும், உறுதியானது. 20 கிலோ விதைப்பாசியில், 70 கிலோ வரை விளையும்.
மூன்று பிளாட்களில், கடலில் கயிறு கட்டி வளர்க்கும் முறையில் வளர்க்கிறேன். ஒரு பிளாட், 15 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளம் இருக்கும். அதில் 100 எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் கயிறுகளை, 80 செ.மீ., இடைவெளி விட்டு கட்டப்படும்.
அவற்றில் விதை பாசிகளை கட்டி, 30 நாட்களுக்கு பின் அறுவடை செய்யப்படும். பின்னர், இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தி, மூன்றாவது நாள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.
இது, 250 வகையான உணவு பதார்த்தங்கள் மற்றும் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் என, 10க்கும் மேற்பட்ட பணியாட்கள் தேவைப்படுவர்.
ஆண்டுக்கு 25,000 ரூபாய் வரையிலான கடற்பாசி விதைகளை, நபார்டு வழங்குவது, எங்களைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், கடற்பாசி, நண்டு வளர்ப்பில் முன் அனுபவம் இருந்தால், அருகில் உள்ள மீன்வளத் துறை மற்றும் 'நபார்டு' வங்கியை அணுகலாம்.

