முழுமையான துாண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்
முழுமையான துாண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்
ADDED : டிச 11, 2024 02:04 AM

திருச்செந்துார்:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், அமலிநகர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அப்பகுதியில், பைபர் படகுகள் கடலுக்குள் இறங்க முடியாத நிலை உள்ளதால், எளிதாக கடலுக்கு சென்று வர, துாண்டில் வளைவு அமைக்க, மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, 58 கோடி ரூபாய் மதிப்பில் துாண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால், முழுமை இல்லாமல், 50 மீட்டர் மட்டுமே துாண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, அமலிநகர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக திருச்செந்துார் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பழைய காயல், புன்னக்காயல், சிங்கித்துறை, உள்ளிட்ட மீனவ கிராம மக்கள், நேற்று, 1,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமலிநகர் கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் நேற்று திடீரென கடலுக்குள் இறங்கி, கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

