தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மீன்பிடி வலைகள் சேகரிப்பு திட்டம்: 14 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

 மீன்பிடி வலைகள் சேகரிப்பு திட்டம்: 14 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

 மீன்பிடி வலைகள் சேகரிப்பு திட்டம்: 14 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்


ADDED : நவ 30, 2025 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மீன் பிடிக்கச் செல்வோர், கடலில் விடும் சேதமடைந்த வலைகளை சேகரிக்கும் திட்டத்தை, 14 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

தமிழகத்தில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் வசிப்போருக்கு, மீன் பிடித்தலே பிரதான தொழில். சிறு படகுகள், விசைப்படகுகள், பெரிய படகுகள் போன்றவற்றை பயன்படுத்தி, பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பிளாஸ்டிக்

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள், தங்கள் வலைகள் சேதமடைந்தால், அதை முறையாக கரைக்கு எடுத்து வந்து, அப்புறப்படுத்துவது இல்லை. மாறாக கடலில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு கைவிடப்படும் வலைகள் பிளாஸ்டிக், நைலான் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டவை.

இவை, கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, கடலில் கைவிடப்படும், மீன்பிடி வலைகளை சேகரிக்கும் திட்டத்தை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலுக்கு செல்லும் மீனவர்கள், அங்கு கைவிடப்படும் வலைகளை சேகரித்து எடுத்து வந்தால், அதை பெற்றுக்கொண்டு எடை அடிப்படையில் பணம் கொடுக்கப்படும்.

சென்னையில் கடந்த ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை காசிமேடு பகுதியில், இதற்கான மையம் ஏற்படுத்தப்பட்டு, வலைகள் சேகரிக்கப்பட்டன. கடந்த ஓராண்டில் இம்மையத்தில், 13,510 கிலோ வலைகள் சேகரிக்கப்பட்டன.

இதற்கு மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நல்ல வரவேற்பு

இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடலில் கைவிடப்படும் வலைகளை, மீனவர்களே சேகரிப்பதால், அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை கிடைக்கிறது. அத்துடன் கடல் பகுதியை மாசு இல்லாமல் பாதுகாப்பதற்கான வாய்ப்பும் உருவாகிறது.

சென்னை காசிமேடு பகுதியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை பிற மாவட்டங்களுக்கு விரிவு படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை, 14 கடலோர மாவட்டங்களில், இதற்கான சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மீனவர்களிடம் இருந்து வலைகளை பெற்று, அதை மறுசுழற்சி பயன்பாட்டுக்கு அனுப்பும் மையங்களை அமைக்க, இடங்களை தேர்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த மையங்கள் திறக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us