UPDATED : அக் 08, 2026 08:47 PM
ADDED : அக் 08, 2026 07:42 PM

துாத்துக்குடி:
நாட்டுப்படகு மீது சரக்கு கப்பல் மோதியதில் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா, மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் லாட்மன், 51.
இவர், தனது மகன் ஸ்டெபிலன் ரூபஸ், 21, அரவிந்த், 23, ஆகியோருடன் நாட்டுப் படகில் நேற்று அதிகாலை கரையில் இருந்து சுமால் ஏழரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, துாத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த ஏஞ்சல் என்ற சிறிய ரக சரக்கு கப்பல் எதிர்பாரதவிதமாக படகு மீது லேசாக மோதியது.
இருப்பினும் மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால், அவர்கள் கடலில் விரித்திருந்த மீன்பிடி வலைகள் அறுந்து சேதமடைந்தன.
இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் மரைன் காவல் நிலையத்தில் லாட்சன் அளித்துள்ள புகார் மனு:
வணிக கப்பல்கள் கரையில் இருந்து, 25 கடல் மைல் தொலைவில்தான் செல்ல வேண்டும்.
ஆனால், ஏஞ்சல் கப்பல் ஏழரை கடல் மைல் தொலைவில் சென்றதால், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் கிழிந்து சேதமடைந்தன.
சம்பந்தப்பட்ட கப்பலின் கேப்டன், உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த மீன்பிடி வலைகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
