ADDED : நவ 06, 2025 10:37 PM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான ஐந்து வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருப்பவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இவர் மீது, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி, அனுமதியின்றி கடந்த 2023ல் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது; மதுரை தனியார் மண்டபத்தில் அரசியல் கூட்டம் நடத்தியது உட்பட ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அய்யப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீதான ஐந்து வழக்குகளையும் ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

