வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்க முடியாது ஆலோசனை கூட்டத்தில் மா.கம்யூ., தகவல்
வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்க முடியாது ஆலோசனை கூட்டத்தில் மா.கம்யூ., தகவல்
ADDED : நவ 06, 2025 10:37 PM
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின், அரசியல் கட்சி தலைவர்கள் அளித்த பேட்டி:
தி.மு.க., - ஆர்.எஸ்.பாரதி: ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி பிரசார கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவதற்கு எந்த நிபந்தனைகள் விதித்தாலும், அது அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். அப்படி நிபந்தனைகள் இருந்தால், அதை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும் என, கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.
அ.தி.மு.க., - ஜெய குமார்: அனைத்து கட்சி ஆலோனை கூட்டம் என்றால், முதல்வர் தலைமையில் நடக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இன்றைய கூட்டத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்கவில்லை. ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அதைப் பின்பற்றி அ.தி.மு.க., ஆட்சியில், அரசியல் கட்சி பிரசாரங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், நீதிமன்றம் சென்று அனுமதி பெறும் நிலை உள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவுபடி வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தாலும், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என வேறுபாடு இருக்கக் கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூ., - பாலகிருஷ்ணன்: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என, நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது; தீர்ப்பு வழங்கவில்லை. இன்றைய கூட்டத்தில், 24 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டது.
அதை நாங்கள் ஏற்கவில்லை. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கு அடிப்படையாக, அந்த அறிக்கை அமைந்துள்ளது.
நீதிமன்றம் கூறிவிட்டது என்பதற்காக, பொதுக்கூட்டங்களுக்கு டிபாசிட் தொகை கேட்கக் கூடாது. அப்படி கட்டுப்பாடுகள் விதிப்பது, காலம் காலமாக போராடி பெற்ற, ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக அமைந்து விடும்.
எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை ஏற்க இயலாது என, அரசு கூற வேண்டும். மீறி உத்தரவு போட்டால், உச்ச நீதிமன்றம் சென்று முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

