ADDED : அக் 01, 2025 07:18 AM

சென்னை : நம் நாளிதழ் செய்தியை அடுத்து, மின் வாரியத்தில் காலியாக இருந்த ஐந்து இயக்குநர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங்களாக, தமிழக மின் வாரியம் செயல்படுகிறது. இவற்றில் ஆறு இயக்குநர்கள் பதவிகள் காலியாக இருந்தன.
இதனால், முக்கிய பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதுகுறித்து, நம் நாளிதழில் செப்., 18ல் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, காலியிடங்களுக்கு நியமிக்க வேண்டிய அதிகாரிகள் பெயர் பட்டியலை மின் வாரியத்திடம் இருந்து, தமிழக அரசு பெற்றது.
அதன் அடிப்படையில், ஐந்து இயக்குநர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து, அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மின் வாரிய பாதுகாப்பு மற்றும் கருவி காத்தல் பிரிவு தலைமை பொறியாளராக உள்ள கிருஷ்ணவேல், மின் இயக்க இயக்குநராகவும்; கரூர் மண்டல தலைமை பொறியாளராக உள்ள ராஜலட்சுமி, மின் உற்பத்தி தொழில்நுட்ப இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை வடக்கு மண்டல தலைமை பொறியாளராக உள்ள செல்வகுமார், மின் பகிர்மான கழக இயக்குநராகவும்; மின் தொடரமைப்பு திட்டங்கள் பிரிவு தலைமை பொறியாளராக உள்ள சிவகுமார், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநராகவும்; மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளரான மங்கலநாதன், பசுமை எரிசக்தி கழக தொழில்நுட்ப இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.