அந்தமானில் தரையிறங்க முடியாமல் இருமுறை சென்னை திரும்பிய விமானம்
அந்தமானில் தரையிறங்க முடியாமல் இருமுறை சென்னை திரும்பிய விமானம்
ADDED : மே 28, 2025 04:44 AM

சென்னை: சென்னையிலிருந்து, அந்தமான் சென்ற இரண்டு விமானங்கள், அங்கு நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாமல் சென்னை மற்றும் கொல்கட்டாவிற்கு திரும்பின.
சென்னையில் இருந்து நேற்று காலை 7:20 மணிக்கு, 168 பயணியருடன் 'ஏர் இந்தியா' விமானம், அந்தமான் புறப்பட்டது.
அப்போது, சூறைக்காற்றுடன் மழை பெய்து, மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரை இறங்க முடியவில்லை. இதனால் நேற்று பகல் 12:30 மணி அளவில், அந்த விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
பின், அங்கு வானிலை சரியாகிவிட்டது என தகவல் வர, மீண்டும் பிற்பகல் 2:30 மணிக்கு அந்தமான் புறப்பட்டு சென்றது.
அப்போதும், மோசமான வானிலை நிலவ, நேற்று இரவு 7:00 மணிக்கு, அந்த விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.
'மோசமான வானிலை காரணமாக, விமானம் இரண்டு முறை திரும்பி வந்துவிட்டது. இந்நிலையில், மூன்றாவது முறை பயணியரை அழைத்து செல்வதற்கு விமான போக்குவரத்து சட்டத்தில் இடம் இல்லை' என, ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பயணியருக்கும் விமான நிறுவன ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேபோல, நேற்று காலை 10:45 மணிக்கு சென்னையில் இருந்து 154 பயணியருடன் அந்தமான் சென்ற 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், மோசமான வானிலையால் அங்கு தரையிறங்க முடியாமல், கொல்கட்டா விமான நிலையத்தில் தரையிறங்கியது.