பிப்.,1 முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
பிப்.,1 முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
UPDATED : ஜன 18, 2024 03:42 PM
ADDED : ஜன 18, 2024 11:08 AM

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் வரும் 22ல் திறக்கப்பட உள்ளது. ராமர் கோயிலை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி அயோத்தியில் சமீபத்தில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் டில்லி, ஆமதாபாத், மும்பை, கோல்கட்டா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.6,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் உயரும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
'ஆஸ்தா' ரயில்கள் இயக்கம்
அயோத்திக்கு செல்ல 'ஆஸ்தா' சிறப்பு ரயில்கள் அறிமுகம்; மொத்தம், 66 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கம்; தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட, 9 நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன; ஜன., 22ம் தேதி முதல் இந்த ரயில் பயணம் துவங்க உள்ளது