ADDED : ஜன 08, 2024 05:32 AM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் வரத்து கால்வாயில் நுரையுடன் தண்ணீர் பொங்கி வந்தது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே திருப்புவனம் வட்டார விவசாயிகள் உள்ளனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஒரு மாதமாக வைகை ஆற்றில் நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டு விட்டது. விளை நிலங்களுக்கு கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்கிறது.
பிரமனூர் கால்வாயில் இருந்து லாடனேந்தல், பாப்பான்குளம் உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு தனி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கால்வாயில் நேற்று தண்ணீர் நுரையுடன் பாய்ந்தது. ரோடு வரை நுரை பரவியதால் வாகனங்களும் சிரமத்துடன் சென்றன.
விவசாயிகள் கூறியதாவது: மதுரை நகரின் மொத்த சாக்கடையும் வைகை ஆற்றில்தான் விடப்படுகிறது. பாசன தண்ணீருடன் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்ததால் தண்ணீர் நுரையுடன் வருகிறது. இதனை பாசனத்திற்கு பயன்படுத்த முடியுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றனர்.