சமுதாய நல்லிணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பேச்சு
சமுதாய நல்லிணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பேச்சு
ADDED : அக் 06, 2024 11:27 PM

சென்னை: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டை ஒட்டி சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, வடதமிழக ஆர்.எஸ்.எஸ்., இணை செயலர் ராமகிருஷ்ண பிரசாத் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் துவக்கப்பட்ட நாளை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில், பேரணி மற்றும் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
ஒரு லட்சம்
அதன்படி, மாநிலம் முழுதும் 56 இடங்களில், நேற்று ஆர்.எஸ்.எஸ்., பேரணி மற்றும் அணிவகுப்பு நடந்தது.
சென்னை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், எழும்பூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் முருகன், கல்வியாளர் நல்லபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜரத்தினம் மைதானம் அருகே மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், வடதமிழகம் ஆர்.எஸ்.எஸ்., இணை செயலர் ராமகிருஷ்ண பிரசாத் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், 100 ஆண்டுகளில் பல பரிமாணங்களாக வளர்ந்துள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள், கல்வி, கோவில் திருப்பணி, பசுக்கள் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். திருநங்கையரையும் அமைப்பில் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
நுாற்றாண்டு துவக்க விழாவை பெரிய நிகழ்ச்சி யாகவோ, பிரமாண்ட ஊர்வலமாகவோ, கருத்தரங்கமாகவோ கொண்டாடப் போவதில்லை என, தலைமை முடிவு செய்துள்ளது. தற்போது, நாடு முழுதும், 65,000 இடங்களில் இயங்கும் 'ஷாகா' அமைப்பை, ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
நல்லிணக்கம்
வட மாவட்டங்களில் இதுபோன்று, 540 இடங்களில் உள்ள ஷாகா அமைப்பை, 1,000 இடங்களில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அதிகமான நேரத்தை செலவிட்டு உழைக்க வேண்டும்.
சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு ஐந்து முக்கியமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
அதில், முக்கியமாக நம் தெருவிற்கு வரும் துப்புரவு தொழிலாளர்கள், காய்கறி, பூ வியாபாரிகள், ஆட்டோ டிரைவர் போன்றவர்களை, ஏதாவது ஒருநாள் வீட்டிற்கு அழைக்க வேண்டும்.
அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டு, ஆறுதலான வார்த்தைகளை பேச வேண்டும். நம்மை பற்றி விசாரிப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, சமுதாய நல்லிணக்கம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

