வாடிக்கையாளர் திட்டியதால் உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை
வாடிக்கையாளர் திட்டியதால் உணவு டெலிவரி ஊழியர் தற்கொலை
UPDATED : செப் 20, 2024 10:52 AM
ADDED : செப் 19, 2024 02:33 AM

கொளத்துார்: கொளத்துாரைச் சேர்ந்தவர் பவித்ரன், 19; கல்லுாரி மாணவர். இவர், 'ஆன்லைன்' உணவு டெலிவரி நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 11ம் தேதி, கொரட்டூர், ஏ.வி.எஸ்., பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நிஷா என்பவர் 'ஆர்டர்' செய்த மளிகை பொருட்களை கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
செயலியில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு நிஷா, 'மேப் லோக்கேஷன்' தவறாக காண்பிக்கிறது எனக்கூறி அருகே உள்ள தன் வீட்டின் முகவரி கொடுத்துள்ளார்.
ஆனால், பவித்ரன், 'அங்கு வரமுடியாது; நீங்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லுங்கள்' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நிஷா இது குறித்து உணவு டெலிவரி நிறுவனத்தில் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நிறுவனம் பவித்ரனை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 13ம் தேதி நிஷாவின் வீட்டிற்கு சென்ற பவித்ரன், ஜன்னல் கண்ணாடியை கல் வீசி உடைத்ததாக, கொரட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பவித்ரனை விசாரித்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.
இதனால் விரக்தியடைந்த பவித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

