அரசு விடுதி சமையல் கூடங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம்
அரசு விடுதி சமையல் கூடங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம்
ADDED : நவ 20, 2025 01:20 AM
சென்னை: 'அரசு மற்றும் தனியார் விடுதி சமையல் கூடங்களில், தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருப்பது கட்டாயம்' என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெற்றிருப்பது கட்டாயம்.
உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில், சுகாதாரம், தரத்தை உறுதி செய்யவும், சுகாதாரமற்ற மற்றும் கலப்படமில்லா உணவு விற்பனையை தடுக்கவும், இம்முறை அமலில் உள்ளது.
அபராதம் அதன்படி, மொத்த வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், சில்லரை வியாபாரிகள், இறக்குமதியாளர்கள், உணவு பொருள் வியாபாரிகள், பெட்டி கடை வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள் என, அனைவரும் பதிவு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடனோ, உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு, 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேநேரம், உயிரிழப்பு கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் உள்ள சமையல் கூடங்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து உள்ளது.
அறிவுறுத்தல் இதுகுறித்து, அதன் அதிகாரிகள் கூறியதாவது:
சில விடுதிகளில் உள்ள சமையல் கூடங்களில் தயாரித்த சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கு இருக்கும் மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை தவிர்க்க, அவ்வப்போது உணவு விதிகளில் உள்ள சமையல் கூடங்களை ஆய்வு செய்ய, மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, பதிவு உரிமம் பெறாத சமையல் கூடங்களை கணக்கெடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

