பிரியாணி ஹோட்டலில் சோதனைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாற்றம்
பிரியாணி ஹோட்டலில் சோதனைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாற்றம்
ADDED : ஏப் 06, 2025 12:51 AM

சென்னை: சென்னையில் பிலால் பிரியாணி ஹோட்டலுக்கு ஆய்வுக்கு சென்ற, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், தரமற்ற உணவு மற்றும் இறைச்சி விற்பனையை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வந்தார்.
சமீபத்தில் தர்ப்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதால், உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று கூறிய அவர், செயற்கை கலப்படத்தை கண்டறிவது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த வீடியோவால், தர்ப்பூசணி விற்பனை குறைந்தது. விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக கிளம்பிய அரசியல் கட்சியினரும், உணவு பாதுகாப்பு துறைக்கு எதிராக திரும்பினர்.
இதேபோல, சென்னையில் உள்ள பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட, 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அது குறித்த புகாரில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் ஆய்வுக்கு சென்றார்.
அப்போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அவர் ஹோட்டலில் சோதனை செய்யாமல், பாதியில் திரும்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போதிலும், சதீஷ்குமாரை பொது சுகாதார துறைக்கு இடமாற்றம் செய்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது அவருக்கு பணி ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
'இந்த திடீர் பணியிட மாற்றம், ஒரு அதிகாரி தன் கடமையை செய்ததற்கு தண்டனையா?' என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

