ADDED : பிப் 05, 2025 02:01 AM

சென்னை:சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில், அவற்றின் அடி ஆழம் வரையிலான நிலவரத்தை அறிய, 'நீரடி சர்வே' மேற்கொள்ள, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை மேம்படுத்த, வனத்துறையின் ஒரு பகுதியாக, ஈர நிலங்கள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள் குறித்த விபரங்களை, ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, சர்வதேச அளவில் ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ள பறவைகள் சரணாலயங்கள், நீர் நிலைகளை பாதுகாப்பதுடன், அவை தொடர்பான தகவல் தொகுப்புகளை உருவாக்கும் பணி துவங்கி உள்ளது.
ராம்சார் பட்டியலில் இடம் பெற்றுள்ள, தமிழக இடங்கள் குறித்த முழு விபரங்களையும், தற்போதைய நிலவரத்தையும், டிஜிட்டல் முறையில் இந்த ஆணையம் தொகுத்து வருகிறது. அடுத்தபடியாக, தமிழகம் முழுதும், 100 இடங்களில் சதுப்பு நிலங்கள், நீர் நிலைகள் குறித்த விபரங்களை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை, ஈர நிலங்கள் ஆணையம் துவக்கி உள்ளது. இதனால், தமிழம் முழுவதும் உள்ள முக்கிய நீர் நிலைகள் குறித்த முழு விபரங்களையும், பொது மக்கள் இணையதளம் வாயிலாக, எளிதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் உள்ள சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளில் ட்ரோன்களை பயன்படுத்தி, 'மேப்பிங்' செய்வது, நீரடி சர்வே முறையில், நீர் நிலைகளின் ஆழம், தரையில் உள்ள மண்ணின் தன்மை உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படும். அத்துடன், ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியிட தகவல் தொகுப்பு முறையிலும், நீர் நிலைகள் அவற்றின் தன்மை அடிப்படையில் வகைப்படுத்தப்படும். இதற்காக அனுபவம் வாய்ந்த, ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான பணிகளை துவக்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.