தனியார் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வனத்துறைக்கு உரிமை இல்லை; உயர்நீதிமன்றத்தில் தகவல்
தனியார் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வனத்துறைக்கு உரிமை இல்லை; உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூன் 08, 2025 04:30 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்கூரணி குத்தகை நிலத்தில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அகற்ற நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில்,'தனியார் பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உரிமை இல்லை' என அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.
முடுக்கூரணி கணபதி தாக்கல் செய்த பொதுநல மனு:
முடுக்கூரணியில் ஒரு குத்தகை நிலத்தில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதிலிருந்து வெளியேறும் வெப்பத்தால் அருகில் எங்கள் நிலத்திலுள்ள பயிர்கள் கருகிவிடுகின்றன. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுகிறது. அம்மர இலைகள் உதிர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. தண்ணீரின் நிறம் சாயக் கழிவுபோல் மாறுகிறது. நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது.
அந்த தண்ணீரை பருகும் கால்நடைகளுக்கு நோய் பரவுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கலெக்டருக்கு மனு அனுப்பினோம். அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியாகிளீட் அமர்வு: சட்டம் அல்லது நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் எந்த தடையும் இல்லாத சூழலில், இம்மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க முடியாது. யூகலிப்டஸ் மரங்கள் தொடர்பான ரிட் மனுக்கள் தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் வனத்துறையின் வரம்பிற்குள் வராது. தனியார் பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் தொடர்பான மனுதாரரின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை வனத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.சட்டம் அல்லது நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் ஏதேனும் தடையை ஏற்படுத்த முடியும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரை மனுதாரர் அணுகலாம்.
வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.