இரண்டு மாதத்தில் 200 கடலாமைகள் பலி காரணம் குறித்து வனத்துறை விசாரணை
இரண்டு மாதத்தில் 200 கடலாமைகள் பலி காரணம் குறித்து வனத்துறை விசாரணை
ADDED : ஜன 16, 2025 10:07 PM
சென்னை:சென்னை கடலோரத்தில் கடந்த இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது குறித்து, விசாரணை துவங்கி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக கடலோர பகுதிகளில் ஐந்து வகையான கடலாமைகள் பரவலாக காணப்படுகின்றன. இவை, டிச., ஜன., மாதங்களில் கரையோரப் பகுதிகளில் வந்து முட்டையிடும்.
அந்த முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரிக்க வைக்கும் பணியில் வனத்துறை, தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுகின்றன.
மீனவர்கள், பொதுமக்கள் மத்தியில், கடலாமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 2023 - 24ம் ஆண்டில், 2.58 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 2.15 லட்சம் கடலாமை குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன. நடப்பாண்டு கடலாமைகளின் முட்டைகளை பாதுகாப்பதற்கான மையங்களை வனத்துறை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முன்னர் எப்போதும் இல்லாத வகையில், திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடலோர பகுதிகளில், கடலாமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்குகின்றன.
பொதுவாக, கடலில் மீன்பிடி படகுகளில் சிக்கி காயமடைந்து இறக்கும் கடலாமைகள் கரை ஒதுங்கும். மாதத்துக்கு ஒன்றிரண்டு என்ற அளவில் இதன் எண்ணிக்கை இருக்கும்.
தற்போது, கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை, 300க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்து, கரை ஒதுங்கியதாக, தன்னார்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வனத்துறையினரின் புள்ளி விபர கணக்கில், 200 கடலாமைகள் இறந்து ஒதுங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது கடலாமைகள் இறப்பு அதிகரித்துள்ளது.
இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கியதாக, எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.
குறிப்பிட்ட சில கடலாமைகள், உடலில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, கால்நடை பராமரிப்பு மற்றும் உயர்நிலை ஆய்வுக் கூடத்துக்கு, பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்.
இந்த ஆய்வு முடிவுகள் வரும் போது தான், கடலாமைகள் இறப்புக்கான காரணங்கள் தெரியவரும். சில பொதுவான தகவல்கள் அடிப்படையில், மீனவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆமைகள் நடமாட்டம் அதிகம் உள்ள சில இடங்களில் மீன் பிடிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்க, அறிவுறுத்தி இருக்கிறோம்.
கடலில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு போன்றவை காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.