13.10 லட்சம் கிலோ செம்மரங்களை வெளிநாடுகளுக்கு விற்க வனத்துறை திட்டம்
13.10 லட்சம் கிலோ செம்மரங்களை வெளிநாடுகளுக்கு விற்க வனத்துறை திட்டம்
ADDED : ஏப் 18, 2025 12:41 AM
சென்னை:தமிழகத்தில் இருந்து, 13.10 லட்சம் கிலோ செம்மரங்களை வெளிநாடுகளுக்கு விற்க, வனத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சிவப்பு சந்தனம் எனப்படும் செம்மரங்களை தனியார் வளர்த்தாலும், அதை விற்பதற்கு வனத் துறை அனுமதி வேண்டும்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில், வனத்தோட்டம் என்ற அடிப்படையில் செம்மரங்கள் வளர்ப்பை, வனத் துறை ஊக்குவித்து வருகிறது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது மட்டுமல்லாது, கடத்தல் நபர்களிடம் இருந்து சுங்கத் துறை வாயிலாக, பல்வேறு இடங்களில் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த மரங்கள், வனத் துறையிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
இது மட்டுமல்லாது, காடுகளில் முதிர்ந்து விழுந்த நிலையில் சேகரிக்கப்பட்ட செம்மரங்களும் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றன. இந்த வகையில் திருப்பத்துார், சேலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் செம்மரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக பொது ஏலம் முறையில் தான், இவற்றை வனத் துறை விற்பனை செய்து வந்தது. இதில், உள்ளூர் அளவிலான சில நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து, ஏலத்தை கட்டுப்படுத்துவதாக புகார் எழுந்தது.
குறைந்த ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, அதிக லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த வனத் துறை தங்கள் அணுகுமுறையை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செம்மரங்கள் விற்பனையில் வழக்கமான நடைமுறையை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். தமிழகத்தில் கிடைக்கும் செம்மரங்களுக்கு, சர்வதேச அளவில் நல்ல விற்பனை வாய்ப்பு காணப்படுகிறது.
அதனால், சர்வதேச அளவில், 'டெண்டர்' வெளியிட்டு விற்க முடிவு செய்து இருக்கிறோம்.
வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக ஏலத்தில் பங்கேற்று, செம்மரங்களை வாங்க வாய்ப்பு ஏற்படும்.
இதன்படி முதல் கட்டமாக, 1,310 டன் செம்மரங்களை, சர்வதேச டெண்டர் வாயிலாக விற்க உள்ளோம். இதற்கு மத்திய அரசு அனுமதி பெறும் பணிகள் முடிந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.