ADDED : ஆக 11, 2025 02:58 AM
சென்னை : 'வடகிழக்கு பருவமழை காலத்தில், துாத்துக்குடி மாவட்டத்தில் நான்கு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, வனத்துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதற்கான பணிகள், 'பசுமை தமிழகம் இயக்கம்' வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் வளம் குன்றிய வனப்பகுதிகள், வனத்துறைக்கு சொந்தமான காலி நிலங்கள், பிற அரசு துறைகளுக்கு சொந்தமான காலி இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்து வருகின்றன.
தனியார் ஒத்துழைப்புடன், காலி நிலங்களில் மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில், மரக்கன்றுகள் நடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கினோம். இப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
அதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை காலத்தில், துாத்துக்குடியில், 4 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளோம். நாற்றுகள் ஓட்டப்பிடாரத்தில் தயாராகி வருகின்றன.
பசுமை தமிழகம் இயக்கம் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் தலைமையிலான குழுவினர், இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

