120 நீர்நிலைகளுக்கு சூழலியல் அறிக்கை தயாரிக்க வல்லுநர்கள் தேடுது வனத்துறை
120 நீர்நிலைகளுக்கு சூழலியல் அறிக்கை தயாரிக்க வல்லுநர்கள் தேடுது வனத்துறை
ADDED : ஏப் 15, 2025 11:54 PM
சென்னை:'தமிழகத்தில், அழிவின் விளிம்பில் உள்ள, 120 நீர் நிலைகளுக்கு, சூழலியல் தன்மை குறித்த அறிக்கை தயாரிக்க, வல்லுநர்களை தேடி வருகிறோம்' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உள்ளன. அவற்றில், 40,000 நீர் நிலைகள், குறிப்பிட்ட சில துறைகளின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன.
சீரமைப்பு
இதில், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்கள் எடுத்த முயற்சியின் பலனாக, சில நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இது போன்ற நீர் நிலைகளின் மொத்த பரப்பளவு, அதன் ஆழம் போன்ற தகவல்கள் மட்டுமே, ஆவணங்களில் உள்ளன. அவற்றின் சூழலியல் தன்மை தொடர்பான விபரங்கள், ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட வாரியாக, நீர் நிலைகளின் விபரங்கள் அடங்கிய, தகவல் தொகுப்பு, செயற்கை கோள் வரைபட இணைப்புடன் தயாரிக்கப்பட்டது. இதில், நீர் நிலை சூழலியல் குறித்த விபரம் இல்லை.
இந்நிலையில், வனத்துறையின் தமிழக ஈர நில வாரியம் வாயிலாக, நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுதும், நீர் நிலைகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதிகளுக்கு வெளியில் உள்ள, 120 நீர் நிலைகளுக்கு, சூழலியல் அடிப்படையிலான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
ஆவணம்
ஒவ்வொரு நீர் நிலையிலும் உள்ள நீரின் தன்மை, அங்கு வரும் பறவைகள், அங்கு வாழும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள், செடிகள், அதை சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்த விபரங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன.
இது, நீர் நிலை வாரியாக, உயிரினங்கள் குறித்த முழுமையான தகவல் தொகுப்பை, பொதுமக்கள் அறிய வழி வகுக்கும். இந்த அறிக்கை தயாரிப்புக்கான வல்லுநர்களை தேடி வருகிறோம். உரிய வல்லுநர்கள் கிடைத்தவுடன், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

