ADDED : அக் 29, 2024 10:21 PM
சென்னை:'வன உயிரியல் ஆராய்ச்சியாளர் ஏ.ஜே.டி.ஜான்சிங் பெயரிலான விருது பெற, நவ., 30க்குள் விண்ணப்பிக்கலாம்' என, வனத்துறை அறிவித்துள்ளது.
அதன் அறிவிப்பு:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஏ.ஜே.டி.ஜான்சிங். இவர் தன் இளமை காலம் முதல், வன உயிரினங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவனத்தில் இணைந்து, ஆய்வுகள் செய்ததுடன், பேராசிரியராகவும் திகழ்ந்தார். வன உயிரின பாதுகாப்பில், அறிவியல்பூர்வ அணுகுமுறைகளுக்கு வழிவகுத்தார்.
உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு இறந்தார். 'அவரது வாழ்நாள் பணியை போற்றும் வகையில், வன உயிரின பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுவோருக்கு, விருது வழங்கப்படும்' என்று அரசு அறிவித்துள்ளது. விருதாளருக்கு, 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில், நவ., 30க்குள் பதிவு செய்யலாம். களப்பணி, நிபுணத்துவம், வன உயிரின பாதுகாப்பில் சாதனை தொடர்பான விபரங்களை, சான்றிதழ்களை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வனத்துறை தலைமையகம், கிண்டி - வேளச்சேரி பிரதான சாலை, சென்னை - 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.