ADDED : பிப் 18, 2024 06:02 AM

கூடலுார், : நீலகிரி மாவட்டம், கூடலுார் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், நாடுகாணி பொன்னுார் அருகே, தோட்டக்கலை பண்ணை மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதியில் திடீர் காட்டு தீ ஏற்பட்டது. தேவாலா வனச்சரகர் சஞ்சீவ், வனவர் சுரேஷ் மற்றும் வன ஊழியர்கள் போராடி காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர்.
இருப்பினும், 5 ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள் எரிந்தன. தீயில், அரிய வகை மூலிகை, சிறு வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வறட்சியால் காட்டு தீ அபாயம் உள்ளது. இதை தடுக்க கூடுதல் கவனம் செலுத்துவதுடன், தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டும்' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு தீ ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தொடர்கிறது. தீ ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்'என்றனர்.