ADDED : பிப் 05, 2024 02:00 AM

சென்னை: தமிழகத்தில் ஆண்டு தோறும், ஜன., முதல் மார்ச் வரை, காட்டுத்தீ ஏற்படுவது சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பனிப் பொழிவால் ஈரமாகும் புற்கள், காலை நேரத்தில் வெயிலில் விரைவாக உலர்ந்துவிடும்.
அப்போது, எளிதில் தீ பிடிக்கும் பொருள் ஏதாவது கிடைத்தால், அங்கு தீப்பற்றி விடுகிறது.
இதைத் தடுக்க, வனப்பகுதிகளில் சாலையை ஒட்டி, 10, 15 அடி அகலத்துக்கு புதர்கள் அகற்றப்படுகின்றன. ஆனாலும், சில இடங்களில் காட்டுத்தீ ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழகத்தில், கிருஷ்ண கிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா, 4; திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், தலா ஒரு இடத்தில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்திய வன ஆய்வு நிறுவனம் கொடுத்த தகவல் அடிப்படையில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள களப் பணியாளர்கள், தீ அணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

