ADDED : டிச 15, 2025 03:00 AM

சென்னை: 'ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், நேற்று நான்கு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும் போது, ஜனவரி முதல் மார்ச் வரை, வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இதைக் கட்டுப்படுத்த, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், செயற்கைக்கோள் உதவியுடன், காட்டுத்தீ ஏற்படும் இடங்களை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து வருகிறது.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், டி.என். பாளையம் சரகத்தில், நான்கு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இது குறித்த தகவலை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில், களப்பணியாளர்களை உஷார்படுத்தி, காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

