பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் மோசடி
பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் மோசடி
ADDED : டிச 15, 2025 02:58 AM

சென்னை: டிஜிட்டல் கைது எனக்கூறி, பத்மபூஷண் விருது பெற்ற, சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் விஞ்ஞானியிடம், 57 லட்சம் ரூபாயை, சைபர் குற்ற வாளிகள் மோசடியாக பறித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் விஞ்ஞானியும், பத்மபூஷண் விருது பெற்றவரும், தற்போது மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், சிறப்பு வகுப்பு பேராசிரியராக பணியாற்றி வருபவருமான, 77 வயது ராமசாமியை, கடந்த செப்டம்பரில் தொடர்பு கொண்ட மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் என்று கூறியுள்ளனர்.
'விஞ்ஞானியின் மொபைல் போன் எண், வடமாநிலத்தில் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, உங்களை, டிஜிட்டல் கைது செய்துள்ளோம்.
'நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது. உங்களது வங்கி ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்' என்று கூறி, அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக, டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாகக் கூறிய மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், ராமசாமி வங்கி கணக்கில் இருந்து, 57 லட்சம் ரூபாயை எடுத்துள்ளனர்.
வங்கி கணக்கை ஆராய்ந்த பின், அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் எனக்கூறி, அந்த மோசடி கும்பல் அழைப்பை துண்டித்து உள்ளது.
சம்பவம் நடந்து சில நாட்கள் கடந்த பின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஞ்ஞானி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அவரது மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகள் அடிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சைபர் குற்றவாளிகள் குறித்த, எவ்வித துப்பும் கிடைக்காமல் இருந்தது.
தற்போது, வடமாநில காவல் துறையிடம், இதேபாணி குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை கேட்டு, அவர்களை கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

