தாயை பிரிந்து தவிக்கும் குட்டி; யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் 6வது நாளாக போராட்டம்
தாயை பிரிந்து தவிக்கும் குட்டி; யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் 6வது நாளாக போராட்டம்
ADDED : டிச 29, 2024 09:06 PM
கோவை: கோவையில் தாய் யானை உயிரிழந்த நிலையில், பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பன்னிமடை பகுதியில் உள்ள தடாகம் காப்பு வனப்பகுதியில், கடந்த டிச.,23 தாய் யானை ஒன்று அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. அதன் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியை மீட்ட வனத்துறையினர், அதனை யானை கூட்டத்துடன் சேர்க்க போராடி வருகின்றனர்.
ஆனால்,அந்த யானை கூட்டம் குட்டி யானையை சேர்த்துக் கொள்ள மறுத்து வருகிறது. வனத்துறையினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால், யானை குட்டிக்கு தேவையான உணவுகளை கொடுத்து, வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 6வது நாளாக இன்றும் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இரு தனிக்குழுக்கள் மற்றும் ட்ரோன் கேமரா குழு அமைக்கப்பட்டு, தடாகம் வடக்கு சுற்று பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் போலுவாம்பட்டி வணச்சரக எல்லைப் பகுதிகளிலும் யானைக் கூட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் கண்காணிக்கப்பட்டது.
ஆனால், எந்த யானை கூட்டமும் தென்படாததால், முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, குட்டியை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

