ADDED : பிப் 20, 2024 12:37 AM

''போராட்டத்துக்கு கிளம்பியவங்களை, பொத்துனாப்புல தள்ளிட்டு போயிட்டாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தணும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ பல வருஷமா போராடிட்டு இருக்குல்லா...
''சமீபத்துல, வேலை நிறுத்த போராட்டம் அறிவிச்ச இந்த அமைப்பின் நிர்வாகிகளை, முதல்வரிடம் அழைச்சிட்டு போய், அமைச்சர் தங்கம் தென்னரசு, 'ஆப்' பண்ணிட்டாரு வே...
''ஜாக்டோ - ஜியோவுல இல்லாத சங்கங்கள் அடங்கிய சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், போன 16ம் தேதி, முதல்வர் வீட்டை முற்றுகையிட போறதா அறிவிச்சது...
இதுக்காக, தென்மாவட்டங்கள்ல இருந்து கிளம்பிய நிர்வாகிகளை, முன்னெச்சரிக்கை கைதுன்னு சொல்லாமலே, போலீசார் நைசா தடுத்துட்டாவ வே...
''மதுரையில, ராத்திரி 10:00 மணிக்கு ரயில் ஏற வந்த சங்க நிர்வாகிகளை, போலீசார் சூழ்ந்து நைசா பேசி, அவங்களிடம் இருந்த டிக்கெட்டை வாங்கி, 'அவுட் போஸ்ட்'ல உட்கார வச்சு, மணிக்கணக்குல கதை பேசினாவ...
''அவங்க போக வேண்டிய ரயில் கிளம்பியதும், நடுராத்திரியில, 'உங்களை எல்லாம் வீட்டுல கொண்டு போய் விடவா'ன்னு பாசம் பொங்க கேட்டா வளாம்... கடுப்பான நிர்வாகிகள், 'ஒண்ணும் வேண்டாம்'னு வீட்டுக்கு திரும்பி போயிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அடிமாட்டு விலைக்கு டெக்ஸ்டைல் மில்லை வாங்க, 'மாஜி' அமைச்சர் தரப்பு பேரம் பேசிட்டு இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தென் மாவட்டத்துல, கோவில் பெயரை கொண்ட நகரத்தின் மையத்துல, 200 ஏக்கர் நிலத்துல பாரம்பரியம் மிக்க, டெக்ஸ்டைல் மில் இருக்குது...
''இந்த மில்லின் நிர்வாகஇயக்குனர் மறைவுக்கு பின், திருமணமாகாத ஒரே மகள் தான் மில்லை நிர்வாகம் பண்றாங்க பா... மில்லுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருக்குது...
''இந்த மில்லை, சில நுாறு கோடி ரூபாய்க்கு வாங்குறதுக்கு, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் தரப்புல, 'டீலிங்' பேசிட்டு இருக்காங்க... லோக்சபா தேர்தல் நேரத்துல, இந்த மில் விவகாரத்தை வச்சு, ஆளுங்கட்சி பிரசாரம் பண்ணவும் வாய்ப்பிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''தன்னார்வலர்கள் ஆதிக்கத்தை தடுக்கணும்னு கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை வனக்கோட்டத்தில், யானைகள் அதிகமா இருக்கு... இதனால, ஊருக்குள் யானைகள் புகும் சம்பவங்கள் அடக்கடி நடக்கறது ஓய்...
''யானைகளை விரட்ட, வனத்துறையில் பிரத்யேக ஆட்களை நியமிச்சிருக்கா... ஆனா, இவா எண்ணிக்கை பத்த மாட்டேங்கறது... இதனால, தன்னார்வலர்கள் பலர் யானை விரட்டும் பணியில ஈடுபடறா ஓய்...
''முறையான பயிற்சி இல்லாத இவா, யானைகளை விரட்டறதால, அவை வழி தவறி வேற ஊர்களுக்குள்ள புகுந்துடறது... 'இவாளால, பிரச்னைகள் தான் வருது... அதனால, இவா சேவையே தேவையில்லை...
''ஆனா, அதிகாரிகள் எங்க பேச்சை கேக்கறதே இல்ல'ன்னு வனத்துறை ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

