பிரிப்பதை மறந்து விடுங்கள் இணைப்பதை நினையுங்கள் லண்டன் தமிழர்களுக்கு முதல்வர் அறிவுரை
பிரிப்பதை மறந்து விடுங்கள் இணைப்பதை நினையுங்கள் லண்டன் தமிழர்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : செப் 08, 2025 01:55 AM

சென்னை:''தமிழர்களை எதுவெல்லாம் பிரிக்குமோ, அதையெல்லாம் மறக்க வேண்டும். எதுவெல்லாம் நம்மை இணைக்குமோ, அதையெல்லாம் நினைக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் நடந்த தமிழர் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
தமிழகத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் துாதர்களாக, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை பார்க்கிறேன்.
தமிழகத்தில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நபருக்குள்ளும் தமிழகம் இரண்டற கலந்து இருக்கிறது. அதை அவர்களின் உணர்வுகளில் பார்க்கும் போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தங்கள் குழந்தைகள், அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அடுத்த தலைமுறை தமிழர்கள், நம்மை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும்.
அதேநேரம், சக தமிழர்களையும் வளர்த்து விட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறையாவது தமிழகம் வரவேண்டும்.
தமிழகத்தில் உங்களால் முடிந்த முதலீட்டை செய்ய வேண்டும். வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
அவர்களுக்கும் உலக கதவுகளை திறந்து விட வேண்டும். கீழடியை தொடர்ந்து பொருநை, கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் அருங்காட்சியகம் அமைத்து வருகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு அதையெல்லாம் சுற்றி காண்பித்து, நம் வரலாற்றை எடுத்து சொல்ல வேண்டும்.
பழம் பெருமையை மட்டும் எடுத்துச் சொல்லாமல், நாம் எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும் கடந்து, இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறோம் என்பதையும் சொல்லி தரவேண்டும்.
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் நம்மை பிரிப்பதுடன், நம் இனத்தையும் வளர விடாது. நம்மை எதுவெல்லாம் பிரிக்குமோ, அதையெல்லாம் மறக்க வேண்டும்.
எதுவெல்லாம் நம்மை இணைக்குமோ, அதையெல்லாம் நினைக்க வேண்டும். தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் அடையாளத்தை, ஒரு போதும் நாம் மறக்கக் கூடாது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.