மக்கள் தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள குழு அமையுங்கள்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மக்கள் தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள குழு அமையுங்கள்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜன 10, 2026 06:07 PM

சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள மாநில முதல்வர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள திட்டமிட்ட உள்ள மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திட இயலும். பல்வேறு மாநிலங்களில் ஜாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
முக்கிய செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்க வேண்டும். வழிமுறைகளை முடிவு செய்வதற்கு முன்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

