த.வெ.க.,வில் இணைந்தார் அ.தி.மு.க., 'மாஜி' கு.ப.கிருஷ்ணன்
த.வெ.க.,வில் இணைந்தார் அ.தி.மு.க., 'மாஜி' கு.ப.கிருஷ்ணன்
ADDED : ஜன 26, 2026 03:08 AM

திருச்சி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அமைச்சரவையில், வேளாண்மை துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன், 1991 -- 96 காலகட்டத்தில் விவசாயிகள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தார்.
கட்சி துவக்கம் அதன் பின், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார்; பின், 'தமிழர் பூமி' என்ற கட்சியை துவக்கினார்; அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதனால், கட்சியை கலைத்துவிட்டு, மீண்டும் அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார்.
தொடர்ந்து, கடந்த 2011ல் நடந்த தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அ.தி.மு.க.,வில் மங்கியிருந்த அவருடைய செல்வாக்கு கூடியது.
பின்னர் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தொகுதி மாறி ஸ்ரீரங்கத்துக்கு வந்து, அங்கு போட்டியிட்டார். ஆனால், தோல்வியே பரிசாகக் கிடைத்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார்; அங்கும் சரிவராமல் போக, அங்கிருந்தும் விலகினார். அரசியல் பேசாமலும் கிருஷ்ணன் இருந்தார்.
அரசியல் ஆர்வம் இந்நிலையில், நடிகர் விஜய் மீதான பிடிப்பு கிருஷ்ணனுக்கு அதிகமாக, அரசியல் ஆர்வம் திடுமென ஏற்பட்டது; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக, த.வெ.க., தலைமைக்கு தகவல் சொல்லி அனுப்பினார்.
நடிகர் விஜயிடம் இருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டது. மாமல்லபுரத்தில் நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த த.வெ.க., தலைவர் விஜயை நேற்று கிருஷ்ணன் சந்தித்து, அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

