எனக்காக யாரும் பரிந்து பேசத்தேவையில்லை; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆவேசம்
எனக்காக யாரும் பரிந்து பேசத்தேவையில்லை; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆவேசம்
ADDED : பிப் 18, 2025 12:09 AM
அவனியாபுரம் : 'எங்களை அழைத்துக் கொண்டு போய் யாரிடமும் சேர்க்க வேண்டாம். எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை,' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும் என்றால் ஆறு மாதம் அமைதியாக இருந்தால் பரிசீலனை செய்வோம் என எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா கூறியுள்ளார். இப்பிரச்னை யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
பிரிந்து கிடக்கின்ற அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் எனக்கூறினேன். யாரும் என்னை அங்கே சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதே கிடையாது. எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை.
அ.தி.மு.க., ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் எதிர்காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க., வை எதிர்க்கின்ற வல்லமை உருவாகும்.
என் மகன் ரவீந்திரநாத்தை யார் என தனக்கு தெரியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். ஜெ., பேரவையில் டாக்டர் வெங்கடேசன் மாநிலச் செயலாளராக இருந்தபோது என் மகன்கள் ரவீந்திரநாத்தையும், ஜெயபிரதிப்பையும் அழைத்து யாராவது ஒருவரை, தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கிறேன் என்று சொன்னார். அப்போது நான் வெங்கடேசனை சந்தித்த நேரத்தில், வெங்கடேசன் எந்த சோபாவில் அமர்ந்திருந்தார், உதயகுமார் அங்கு எப்படி இருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது.
எனது மகனை மாவட்ட செயலாளார் பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்று டாக்டர் வெங்கடேசனிடம் சொன்னேன்; ஏனென்றால் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சிகள் கூறுவார்கள்.
வெங்கடேசனோ ஜெயலலிதாவிடம் இது குறித்து கூறியுள்ளார். ஜெயலலிதாவை பின்னர் நான் சந்தித்தபோது, நான்தான் மாவட்ட செயலாளர் பதவி தருகிறேன் என கூறினேன் என்றார் அவர்.
எனது மகனை ஜெயலலிதாவிற்கு அடையாளம் தெரிந்த போது உதயகுமாருக்கு ஏன் தெரியவில்லை.
எங்களைப் பற்றி உதயகுமார் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இரட்டை இலையை எதிர்த்து நான் போட்டியிடும் சூழல் யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். என்னை தோற்கடிக்க ஆறு 'பன்னீர் செல்வத்தை' தேடி கொண்டு வந்து நிறுத்தினார்கள். இரட்டை இலை டெபாசிட் இழந்தது. அதற்கு முழு காரணம் உதயகுமார் தான் என்றார்.