கோடநாடு கொலை, கொள்ளை வழக்குஜெ., முன்னாள் வளர்ப்பு மகனிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குஜெ., முன்னாள் வளர்ப்பு மகனிடம் விசாரணை
ADDED : மார் 28, 2025 02:57 AM

கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதையடுத்து. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், மனோஜ் உட்பட, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கார் ஓட்டுனர் கனகராஜ், சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். கோடநாடு எஸ்டேட்டில் கணினி பணியாளராக பணியாற்றிய தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதானவர்கள் மற்றும் எதிர்தரப்பினர் சார்பில் 18 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 18 பேரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்தனர். அதில், சசிகலா உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடத்த அவரை நேற்று விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு சுதாகரன் காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் தனது வக்கீலுடன் ஆஜரானார்.
அவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., மாதவன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரர் என்ற அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவரிடம் 40 கேள்விகளை கேட்டனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுதாகரனையடுத்து, முன்னாள் போலீஸ் அதிகாரியிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
சுதாகரன் தெரிவிக்கையில், ''என்னிடம் போலீசார் 40 கேள்விகளை கேட்டனர். அதற்கு எனக்கு தெரிந்த உண்மையான பதிலை அளித்துள்ளேன். விசாரணை முழுமையாக முடிந்தது. இதற்கு பின் விசாரணைக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்,'' என்றார்.