ஸ்டாலினை தட்டி எழுப்புங்கள் * கூறுகிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்
ஸ்டாலினை தட்டி எழுப்புங்கள் * கூறுகிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்
ADDED : டிச 18, 2024 07:36 PM
மதுரை:''முதல்வர் ஸ்டாலின் தான் கும்பகர்ண துாக்கத்தில் உள்ளார். அவரை தட்டி எழுப்புங்கள்,'' என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டம் வாயிலாக தமிழக மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க., பெற்றுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் தற்போது கட்சி சார்பில் கூட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போதைய தி.மு.க., ஆட்சியில் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் பெற்றுத் தருவோம்.
அமைச்சர் ராஜா அவரது பதவியை தக்க வைப்பதற்காக, பழனிசாமியை, 'துாங்குகிறார்' என பேசியுள்ளார். தம்பி, புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அதனால் தான் இப்படி பேசுகிறார். யார் துாங்கிக் கொண்டிருக்கின்றனர் என மக்களுக்கு தெரியும்.
சட்டசபையில் டங்ஸ்டன் ஒப்பந்த பிரச்னை தொடர்பாக பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் பதில் அளிக்க திணறினார். 10 மாதங்களாக ஒரு கடிதம் கூட எழுதாமல் மவுனமாக இருந்தது யார்?
கும்பகர்ண துாக்கத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர் ராஜா தட்டி எழுப்ப வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட வேண்டும் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கற்பனை கலந்த கதை போல பேசி வருகிறார். பா.ஜ., அல்லாத மக்கள் விரும்பும் கூட்டணியை பழனிசாமி அமைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.