கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்தால் அ.தி.மு.க., எதிர்த்து குரல் கொடுக்கும் முன்னாள் அமைச்சர் உறுதி
கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்தால் அ.தி.மு.க., எதிர்த்து குரல் கொடுக்கும் முன்னாள் அமைச்சர் உறுதி
ADDED : ஜூன் 19, 2025 01:29 AM

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உழைப்பால் உயர்ந்து முதல்வராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல், மிக கேவலமாக, ஜாதிய வன்மத்தில், தனிமனித விமர்சனத்தில் தி.மு.க., இறங்கியுள்ளது. அப்பட்டமான ஜாதிவெறி கட்சி தி.மு.க, என்பதை, அம்பலப்படுத்திக்கொண்டு நிற்கிறது. ஜாதிவெறி, உருவக்கேலிதான் தி.மு.க., கடைப்பிடிக்கும் திராவிட கொள்கைகளா?
விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்தவர்; வயல்வெளியில் வியர்வை சிந்தி விவசாயம் செய்தவர் பழனிசாமி என்பதில் எங்களுக்கு பெருமையும், கர்வமும் எப்போதும் உண்டு. போட்ட சட்டையையே கிழித்துக்கொண்டு, 'ஐயோ, அம்மா' என்று, முதல்வர் ஸ்டாலின் கதறிய காட்சிகளை, 'கார்ட்டூனில்' வரைய வேண்டிய அவசியம் இல்லை.
அதெல்லாம் டிவியில் பார்த்து, தமிழக மக்கள் கைக்கொட்டி சிரித்ததை யாரும் மறக்கவில்லை.
கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே பழனிசாமி ஆட்சியில்தான் என்ற உண்மையை மறைத்து கத்துவதை, தி.மு.க.,வினர் நிறுத்திக் கொள்ளுங்கள். கீழடி அகழாய்வுப் பணிக்கு, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 2018 ஏப்., 18ல், பணிகள் துவங்கி, 2018 செப்.-, ல் முடிந்தன.
அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைத்து, 5,820 அரிய வகை தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க, 12.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், இத்திட்டங்களை முன்னிருந்து செயல்படுத்திய இப்போதைய நிதித்துறை செயலர் உதயசந்திரனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கூடுதல் உறுதிப்படுத்தலுக்காக, மத்திய அரசு சில தரவுகளைக் கேட்டுள்ளது.
அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகின்றனர். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்க்கும் முதல் குரல், அ.தி.மு.க.,வின் குரலாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

