அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மாஜி மந்திரி தம்பி வழக்கு தள்ளி வைப்பு
அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மாஜி மந்திரி தம்பி வழக்கு தள்ளி வைப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:08 AM
சென்னை :  அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட், 5ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில், அசோக்குமார் தரப்பில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களை தாக்கல் செய்யும்படி, அசோக்குமார் தரப்புக்கு உத்தர விட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அசோக்குமார் தரப்பில், விமான டிக்கெட், சிகிச்சை மேற்கொள்ள உள்ள மருத்துவமனையின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதை பார்த்த நீதிபதிகள், அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள சிகிச்சை விபரங்கள், இந்திய மருத்துவர் பரிந்துரைத்தது குறித்த ஆவணங்கள் போன்றவற்றை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கு உத்தரவிட்டு, ஆகஸ்ட், 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

