அறிவாலயத்தில் ஐ.டி., கார்டை துாக்கி எறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.,
அறிவாலயத்தில் ஐ.டி., கார்டை துாக்கி எறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.,
ADDED : டிச 11, 2025 03:46 AM

சென்னை: அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போலீசார் அனுமதிக்காததால், அதிருப்தி அடைந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆடலரசன், தனது அடையாள அட்டையை துாக்கி வீசினார். அப்போது, காரில் ஏற வந்த முதல்வர் ஸ்டாலின், அவரை சமாதானப்படுத்தி அனுப் பி வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' பெறுவதற்காக, தி.மு.க., நிர்வாகிகள், சென்னை அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி தொகுதி முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆடலரசன், நேற்று அறிவாலயம் வந்தார்.
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என, அங்கு பணியிலிருந்த போலீசாரிடம் கூறினார். முன் அனுமதி பெறாததால், போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆடலரசன், தன் சட்டை பாக்கெட்டில் இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கான அடையாள அட்டையை எடுத்து ஆவேசமாக துாக்கி எறிந்தார். 'போலீஸ் அதிகாரிகள் இன்று இருப்பர்; நாளை சென்று விடுவர். ஆனால், அறிவாலயத்திற்கு நாங்கள் நிரந்தரமாக வந்து செல்வோம். என்னை ஏன் சந்திக்க விடாமல் தடுக்கிறீர்கள்' என, போலீசாரிடம் ஆவேசப்பட்டார்.
அவரது சத்தம் கேட்டு வெளியே வந்த, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலர் அன்பகம் கலை உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்தினர்.
அப்போது, அறிவாலயத்தில் உள்ள தன் அறையிலிருந்து வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின், ஆடலரசனை அழைத்தார். அவர் உடனே, முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கினார்.
முதல்வர் ஸ்டாலின், 'நீங்கள் எப்போது வேண்டுமானாலும், என்னை சந்திக்கலாம்' எனக் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார்.
செய்தியாளர்களிடம் ஆடலரசன் கூறுகையில், ''முதல்வர் பிசியாக இருப்பதாகக் கூறி, போலீசார் என்னை தடுத்தனர். அதனால் பிரச்னை ஏற்பட்டது. பின், முதல்வரிடம் என் தொகுதியில் உள்ள பொதுவான பிரச்னைகளை தெரிவித்தேன். அதை தீர்த்து வைப்பதாக தெரிவித்தார்,'' என்றார்.

