முன்னாள் எம்.எல்.ஏ., மனு அரசுக்கு ஆறு வாரம் கெடு
முன்னாள் எம்.எல்.ஏ., மனு அரசுக்கு ஆறு வாரம் கெடு
ADDED : நவ 23, 2025 01:40 AM
சென்னை: 'பென்ஷன் மற்றும் பிற பணப் பலன்களை வழங்க கோரிய, இளையான்குடி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.மதியரசனின் கோரிக்கையை, ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தொகுதியில், கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜகண்ணப்பன், கடந்த 2009ல் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அங்கு 2009ல் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில், எஸ்.மதியரசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், 2011ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
இந்நிலையில், 2009 முதல் 2011 வரை, எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்த தனக்கு, பென்ஷன் மற்றும் பிற பணப்பலன்களை வழங்கக் கோரி, கடந்த 2020ம் ஆண்டு அக்., 21ல், தமிழக அரசுக்கு விண்ணப்பம் செய்தார்.
அதன் மீது, எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'முன்னாள் எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்த நீதிபதி, பென்ஷன் மற்றும் பிற பணப்பலன்கள் வழங்கக்கோரி, முன்னாள் எம்.எல்.ஏ., கடந்த 2020ல் அளித்த விண்ணப்பத்தை, ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தமிழக சட்டசபை செயலருக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

