முன்னாள் எஸ்.ஐ., வெட்டிக்கொலை நெல்லையில் பயங்கரம்; போலீசுக்கு கண்டனம்
முன்னாள் எஸ்.ஐ., வெட்டிக்கொலை நெல்லையில் பயங்கரம்; போலீசுக்கு கண்டனம்
ADDED : மார் 19, 2025 12:01 AM

திருநெல்வேலி,:'நிலத்தகராறில் என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது; காப்பாற்றுங்கள்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ அனுப்பிய, விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ., நெல்லையில் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
முன்விரோதம்
நெல்லையில் குடும்பத்துடன் வசித்த அவர், அங்குள்ள முஸ்லிம் தைக்கா ஒன்றில் முத்தவல்லி எனப்படும் நிர்வாகியாக இருந்தார். அந்த தைக்காவுக்கு அருகே, 36 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக, ஜாகிர் உசேனுக்கும், நுார்னிஷா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நுார்னிஷா ஏற்கனவே திருமணமானவர். முஸ்லிமாக மதம் மாறி, தவ்பீக் என பெயர் மாற்றிக்கொண்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
கடந்த டிசம்பரில், தன்னை ஜாதி ரீதியாக திட்டுவதாகக் கூறி, தவ்பீக் அளித்த புகாரில், வன்கொடுமை சட்டத்தில் ஜாஹிர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவர் முன்ஜாமின் பெற்றார்.
நேற்று அதிகாலை, திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகேயுள்ள மசூதியில் தொழுகை முடித்து, ஜாஹிர் உசேன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தெற்கு மவுன்ட் சாலை அருகே வந்தபோது, அதிகாலை, 5:40 மணிக்கு நான்கு பேர் கும்பல் அவரை துரத்தியது. தப்பி ஓடிய அவரை மடக்கி, ரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது.
தகவல் அறிந்து அங்கு கூடிய ஜாஹிர் உசேனின் மகள் மோஷினா மற்றும் குடும்பத்தினர், அவரது உடலை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் வீட்டில்
'தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து, ஏற்கனவே உங்களிடம் முறையிட்டாரே... நீங்கள் ஏன் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை... இன்று அவர் கொலை செய்யப்பட்ட பிறகு வந்துள்ளீர்களே... இப்போதும் பணம் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருங்கள்' என, போலீசாரை பார்த்து ஆவேசமாக பேசினர்.
சென்னை மேயராக ஸ்டாலின் பதவி வகித்த போது, அவரது இல்லத்தில் ஜாஹிர் உசேன் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.
அதைச் சுட்டிக்காட்டி, ஜாஹிர் உசேன் சில தினங்களுக்கு முன் முதல்வரின் பார்வைக்கு என, ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், 'என்னை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் கொலை செய்யப்படுவது உறுதி. முதல்வர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வீடியோவை முதல்வர் பார்வைக்கு அனுப்பியதோடு, தன் முகநுால் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நேற்று அவரது கொலைக்குப் பின், அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
மோஷினா கூறுகையில், ''36 சென்ட் நிலத்தை சொந்தம் கொண்டாடும் நபர்கள், எங்கள் தந்தையை கொலை செய்துள்ளனர். கொலை மிரட்டல் இருப்பது குறித்து புகார் செய்தும், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது தான் பொய்வழக்கு பதிவு செய்தனர்,'' என, குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, ஜாஹிர் உசேன் கொலையில் தேடப்பட்ட நான்கு பேரில் பால்கட்டளை கார்த்திக், 32, டவுன் தொட்டி பாலத்தெரு அக்பர் ஷா, 32, ஆகியோர், நேற்று திருநெல்வேலி ஜே.எம்., 3வது கோர்ட்டில் சரணடைந்தனர்.
தவ்பீக் உட்பட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
திருநெல்வேலியில், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹிர் உசேன், காலை தொழுகை முடிந்து வரும் வழியில், வெட்டிக் கொல்லப்பட்டு உள்ளார். பணி ஓய்வுக்குப் பின், சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து குரல் கொடுத்தார்.
இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன், அவர் பேசிய வீடியோ வெளியாகி இருந்தது. ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே, கொலை மிரட்டல் விடுத்து, அவரை படுகொலை செய்யும் அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
சாமானிய மக்களின் புகார்களை, காவல் துறை கண்டு கொள்வதில்லை. தி.மு.க., அரசை விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க மட்டுமே, காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத தி.மு.க., அரசால், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து வந்த, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கே பாதுகாப்பு இல்லை.
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் - ஒழுங்கு இருப்பதாக, 'போட்டோஷூட்' வசனம் பேசியதை முதல்வர் நினைவில் கொண்டு, அந்த இரும்புக் கரத்தின் துரு நீக்கி, இனியேனும் செயல்படுத்த வேண்டும்.