ரூ.60 லட்சம் இழப்பீடு கோரிய முன்னாள் ராணுவ வீரர் மனு தள்ளுபடி
ரூ.60 லட்சம் இழப்பீடு கோரிய முன்னாள் ராணுவ வீரர் மனு தள்ளுபடி
ADDED : மார் 23, 2025 01:41 AM
சென்னை: 'ஹவானா சிண்ட்ரோம்' என்ற, உயர் அதிர்வெண் நுண்ணலையை செலுத்தியதால், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், 60 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் ராணுவ வீரரான பூபாலன் என்பவர், தாக்கல் செய்த மனு:
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா. இங்கு, 2016ம் ஆண்டு தங்கியிருந்த அமெரிக்க துாதரக அதிகாரிகள் பலருக்கு, வாந்தி வருவது போன்ற உணர்வு, அதீத தலைவலி, கண் பாதிப்பு, உடல் அரிப்பு, வினோத சத்தங்கள் கேட்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த தொடர் உடல் நல குறைப்பாட்டுக்கு, 'ஹவானா சிண்ட்ரோம்' என்று பெயர். உலக நாடுகளில், 2016ம் ஆண்டுகளில் பரவலாக பேசப்பட்டது.
அதுபோன்ற உயர் அதிர்வெண் நுண்ணலையை எனக்கு செலுத்தி, இந்திய பாதுகாப்பு விண்வெளி முகமை வேவு பார்த்தது.
இந்த ஹவானா சிண்ட்ரோம் காரணமாக, என் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின், உணவகம் நடத்தி வந்தேன். உடல் நல பாதிப்பால் தொழிலை சரிவர கவனிக்க முடியவில்லை.
இதனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, 60 லட்சம் ரூபாய் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தன்னை வேவு பார்ப்பதற்காக, ஹவானா சிண்ட்ரோம் என்ற, உயர் அதிர்வெண் கொண்ட நுண்ணலையை செலுத்தியதாக கூறும் குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. மத்திய அரசும் இதை மறுத்துள்ளது.
ஏற்கனவே, கடந்தாண்டு இதே கோரிக்கை யுடன் தாக்கல் செய்த மனுவை, தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.