கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக 'மாஜி' உருக்கம்
கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக 'மாஜி' உருக்கம்
ADDED : ஏப் 11, 2025 12:27 AM
துாத்துக்குடி:'கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேசியுள்ளார்.
துாத்துக்குடியில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு சார்பில், 'புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூட வேண்டும்' என வலியுறுத்தி, நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக சட்டசபையில் பேச வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், சமீபத்தில் கேட்டுக் கொண்டேன். அ.தி.மு.க., தரப்பில் சட்டசபையில் இது குறித்துப் பேசினால், 'அ.தி.மு.க., ஆட்சியில் ஏன் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை?' என, தி.மு.க.வினர் எதிர்கேள்வி எழுப்புவர். அது நமக்கே சிக்கலாகும். அதனால், இக்கோரிக்கையை எழுப்புவது சிரமம் என்றார்.
அ.தி.மு.க., ஆட்சியில் புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூடியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருந்ததற்கு, என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் செய்ய முடியாமல் போனதற்காக, பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். கிறிஸ்தவன் என்ற முறையில், இதை நினைத்து வெட்கமாக இருக்கிறது.
மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானம் அரசுக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு, தமிழக அரசு வர வேண்டும். கிறிஸ்தவ மக்களும், நாங்கள் எதற்காகவும் மது அருந்த மாட்டோம் என முடிவு எடுக்க வேண்டும்.
இப்படியொரு கோரிக்கை, தற்போது சிறிய தீயாக பற்றவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், இந்தத் தீ பற்றி எரிய வேண்டும். தற்போது, ஆட்சியில் உள்ளவர்களை குறை கூறவில்லை. அவர்கள் கண்டிப்பாக கோரிக்கையை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

